BREAKING NEWS

ads

Thursday, 30 July 2015

கனவு கண்டது மணிப்பூர் கிராமம் நனவாக்கினார் அப்துல் கலாம்!

கனவு கண்டது மணிப்பூர் கிராமம் நனவாக்கினார் அப்துல் கலாம்!
அக்டோபர் 15-ம் தேதி இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் ஆவுல் ஃபக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் மரைக்காயர் என்ற மாமனிதரின் பிறந்த நாள். அதுவும் இந்த ஆண்டு அவர் 80வது வயதை நிறைவு செய்கிறார்.
அவரது பிறந்த நாளுக்கு மறுநாளான அக்டோபர் 16-ம் தேதியை "கலாம் தினம்' என்று ஒரு கிராமமே சீரும் சிறப்புமாகக் கொண்டாடுகிறது. மணிப்பூர் மாநிலத்தின் பங்லோன் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கோலாகலத்துடன் ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவின் குடியரசுத் தலைவர்களோ வேறு எந்த உயர் தலைவர்களோ இப்படி ஒரு கிராமத்துக்குச் சென்றிருப்பார்களோ, கேள்விப்பட்டிருப்பார்களோ தெரியவில்லை.
பெயரில் மட்டும் குடியரசுத் தலைவராக இல்லாமல் மக்களின் மனதிலும் தலைவராகவே இன்றும் குடிகொண்டுள்ள அப்துல் கலாம், மணிப்பூர் கிராமத்தில் ஒரு சாதாரண பள்ளித் தலைமை ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்று, வாக்குத் தவறாமல் அந்தக் கிராமத்துக்குச் சென்று பள்ளி மாணவர்களுடன் கலந்து பேசியிருக்கிறார்.
அப்துல் கலாம் அந்த கிராமத்துக்கு வருகை புரிந்துவிட்டு திரும்பியது கூடப் பெரிதல்ல. அக்கிராமத்தின் பள்ளி மாணவர்களுக்காக கணினிகளை தனது அலுவலகம் மூலம் நேரடியாகவே வழங்கி, அந்தக் கிராமத்துச் சிறுவர்களுக்காக அறிவுலகத்தின் கதவுகளையே திறந்து வைத்திருக்கிறார்.
மணிப்பூரின் ஒதுக்கப்பட்ட மலைப் பகுதி கிராமம் பங்லன். அங்குள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் கின் காங்டே. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் செல்லும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமைத் தனது பள்ளியின் பொன்விழாவுக்கு அழைக்கத் திட்டமிட்டு அவருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.
2006-ம் ஆண்டு ஏப்ரலில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க நேரம் அளிக்கப்பட்டது. சந்தித்தார்.
அந்த சந்திப்பின்போது காங்டே கூறினார்:
""கம்ப்யூட்டர் உலகமான சிலிக்கான் வேலியில் கிறிஸ்தோபரைவிட கிருஷ்ணமூர்த்தி இன்று பிரபலமாகிவிட்டார். ஆனால், இந்தியாவின் பழங்குடியினர் பலர் கணினி என்பதைப் பார்த்தறியாதவர்கள். அதனால்தான், வடகிழக்கு மாநிலத்துக்கு அழைக்கிறோம்'' என்றார்.
தொடர்ந்து தனது பள்ளியின் பொன்விழாவுக்கு காங்டே விடுத்த அழைப்பை ஏற்க இயலாத நிலையைப் பக்குவமாக உணர்த்திய அப்துல் கலாம், ""மணிப்பூர் மாநிலத்துக்கு அலுவலாக வரும்போது நிச்சயம் உங்கள் கிராமப் பள்ளிக்கு வருவேன்'' என்றார்.
பள்ளிக்கு வருவேன் என்று சொன்னதை அதே ஆண்டு அக்டோபரில் நிறைவேற்றினார் கலாம். அது மட்டுமா? பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தராத வாக்குறுதியையும் நிறைவேற்றியுள்ளார் அவர். மணிப்பூர் உள்பட பல வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நிலைமையை உணர்த்தும் வகையில் நாங்கள் கூறியதை மெüனமாகக் கேட்டுக் கொண்டார் அப்துல் கலாம்.
மணிப்பூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அக்டோபரில் நடைபெற்றது. குடியரசுத் தலைவராக உள்ளவர்தான் அப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்பதால், அதில் பங்கேற்றார். அவரது நிகழ்ச்சி நிரலில் இன்னொரு நிகழ்ச்சி மட்டும் இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் மிஜோரம் மாநிலத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
தான் ஏற்கெனவே மணிப்பூர் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் கொடுத்த வாக்குறுதியை நினைவில் வைத்துக் கொண்ட கலாம், நிகழ்ச்சியில் பங்லன் கிராமப் பள்ளி நிகழ்ச்சியையும் இணைக்க உத்தரவிட்டார்.
பல காலம் புறக்கணிக்கப்பட்டிருந்த அந்த கிராமம்,திடீரென்று புதிய மின் இணைப்பு பெற்றது. புதிய டிரான்ஸ்பார்மர்கள் வரவழைக்கப்பட்டன. கிராமத்தை எட்டிப் பார்க்காத அதிகாரிகள் இரவு பகலென்று அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தனர். பல ஆண்டுகள் பூசப்படாத பள்ளியின் சுவருக்கு வெள்ளையடிக்கப்பட்டது. அதே சமயம் சில இயக்கத்தினர் அந்த மாநிலத்தில் பொது வேலைநிறுத்தம் நடத்தினர். "நிலைமை இப்படி ஆகிவிட்டதே, கலாம் வருவாரா?' என்ற கவலை பங்லன் பள்ளித் தலைமை ஆசிரியர் காங்டேவுக்குக் கவலை.

ஆனால் சொன்னது கலாம் ஆயிற்றே!
சொன்னபடி வந்தார், அந்தப் பள்ளியைச் சுற்றிப் பார்த்தார், அவர்கள் அளித்த விருந்தோம்பலை, வரவேற்பை மிக்க மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார்.
அத்துடன் நிற்காமல், குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து நேரடியாக அந்தப் பளளிக்கு கம்ப்யூட்டர் மையம் அமைக்கவும், புதிய கட்டடம் கட்டவும், கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான இதர உதவிகளைச் செய்வதாகவும் அறிவித்தார்.
குறுகிய காலத்தில் அவையெல்லாமே நிறைவேறின.
""எங்கள் பள்ளியில் கணினி மையத்தை அமைத்து கணினிகளை வழங்கினார். அறிவியல் ஆய்வகத்தையும் அமைத்துத் தந்தார். இன்று, எங்கள் கிராமத்தில் பலர் கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்'' என்கிறார் காங்டே.
பழங்குடியினத்தைச் சேர்ந்த ஐம்பது குடும்பங்கள் மட்டுமே வாழும் அந்தக் கிராமத்தில் தனது முத்திரையைப் பதித்த கலாமுக்கு நன்றி செலுத்தும் வகையில், அவரது பிறந்தநாளை அடுத்த அக்டோபர் 16-ம் தேதியை அந்தப் பள்ளி "கலாம் தினம்' என்று கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது. அதில் கிராமத்தினர் அனைவரும் பங்கேற்று கலாமுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

Post a Comment